மழைக்காலத்து நினைவுகள்…

மழைக்கும் எனக்கும்
உறவென்ன எனத் தெரியாது.
ஆனால்,
நம்மை
உறவாக்கியதற்கோ என்னவோ,
மழையும்,
உன் நினைவுகளும்
எப்போதும் இனிமையே….
குடையின்றி நடந்த
ஒரு தனிமைப் பயணத்தில்,
உன்னுடன் பகிர்ந்த
ஒரு குடையின் நெருக்கம்,
நம் தயக்கத்தை நிச்சயமாய்
உடைத்திருக்கக் கூடும்.
ஓரிரு வார்த்தைகளின்
பரிமாற்றம்,
அந்த மழையிரவில்
பூத்த பூக்களாய்,
புதிதாய் பலவாய்
அன்று முதல்தான்
மலர்ந்திருக்ககூடும்.
குடைபிடித்தது மழைக்குத்தான்
நமக்கில்லை என்பதுபோல்,
இருவரும் நனைந்தது,
வீடடைந்தபின்தான் தெரிந்தது.
அந்த முதல் வெட்கமும்
காற்றோடு மழையாய்,
கரைந்து போனதற்காய்,
இன்றும் என்னைப் பார்த்துச்
சிரிக்கும்
இந்த பொல்லாத மழை.
மறுநாளும்
பெய்யெனப் பெய்யாதா
மாமழையென,
மறந்துபோனேன் போல்,
மறுத்து வைத்து வந்தேன்
என் குடையை…
உன்னுடனான குடைப்பயணம்,
மீண்டும் தொடரவேண்டுமென…
இன்னொரு கார்காலத்தில்,
நம் இருமனம்
திருமணமான காலத்தில்,
சில்லென்ற காற்று,
பரவவிட்ட குளிருக்காய்,
நான் இழுத்துப் போர்த்திய
சேலைத் தலைப்பின்
அணைப்பிற்காய்,
நீ ஏங்கியதும்,
நான் கள்ளச் சிரிப்பும்
கலவித் துடிப்புமாய்
காதல் கொண்டதற்காய்,
இன்றும்
என் உள்ளங்கையில்
முகம் புதையும்.
அந்த நேசத்தின்,
சுவாசத்திற்கேனும்
நான் மழைக்காதலி ஆனேன்.
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும்
உன் மழைக்காலத்து
நினைவு சொல்லியே
கடக்கையில்,
நிச்சயமாய் தோன்றியது,
மழையும்,
உன் காதலும்,
என்றுமே
மழையில் நனைந்த
இலைகளாய்,
பசுமையாய்
மனதை நிறைத்திருக்கும்
எப்போதும்.

Excellent my friend.