புதிய காலை…

42-17132275
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான்
பிறக்கிறேன் ஒவ்வொரு நாளும்.
பனித்துளிக்குள் அடைபெற்ற நீராய்,
வாழ்க்கை ஒரு தினத்துள் அடங்கிடுமென,
புரிவதற்க்குள் முடிந்திடும்
இந்த காலை.

இயன்றதை செய்ய முண்டியடிக்கும்
ஒவ்வொரு முயற்சியையும்,
இயலாமை தள்ளிப்பார்க்கும்.
முடிவுகளில்லா தொடக்கங்கள்
அப்போது சிரித்திருக்கும்.

தோல்விகள் சீண்டிப்பார்க்கும்,
சிலசமயம்,
நம்பிக்கை தோள்கொடுக்கும்.
கடந்தகால அறிவுரைகள்
அறிவிப்பில்லாமல் வந்துசேர்கையில்,
தவறுகள் அழகாய் அரங்கேறியிருக்கும்.
நாளைக்காய் சேமித்துவைக்க
தோல்வியின் பாடங்கள்
மீண்டும் அறிவுரையாய் போய் தூங்கும்.

என்றைக்காவது கிட்டிவிடும் வெற்றியும்
அன்றைய நாளின்
முடிவுனூடே மறைந்துவிடும்.
அடுத்த புதிய நாளில்,
பரிச்சயமற்றவனாய் கையசைத்துச் செல்லும்.
மீண்டெழுந்து யோசித்துப்பார்க்கையில்,
ஒரு நாளைய வெற்றி என்பது,
பிறர் மனம் வாடாமை,
தீயவை தீண்டாமை மட்டுமே.

இதோ, நான் மடியும் நேரம் நெருங்கிவிட்டது,
மீண்டும் பிறப்பேன்,
தோல்விகண்டு துவளாமல்,
வெற்றியோடு மகிழாமல்,
முயற்சி மட்டுமே சொந்தமாய்,
நான் மீண்டும் பிறப்பேன்,
நாளைய புதிய விடியலில்.

~ by janasara மேல் நவம்பர் 13, 2008.

ஒரு பதில் to “புதிய காலை…”

  1. Very Very Nice. Keep writing.

மறுமொழி இடுக